வெள்ளி, 7 செப்டம்பர், 2018

செப்டம்பர் - 11 வழக்கமான வழித்தடத்தில் செல்லலாம் என்ற மாவட்ட நிர்வாகத்தின் முடிவை மூவேந்தர் புலிப்படை வரவேற்கிறது!

செப்டம்பர் - 11
வழக்கமான வழித்தடத்தில் செல்லலாம் என்ற மாவட்ட நிர்வாகத்தின் முடிவை மூவேந்தர் புலிப்படை வரவேற்கிறது!

"சமத்துவப் போராளி" தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாளான செப்டம்பர் –11 அன்று ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு மக்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து வந்தது. இந்நிலையில் 2011 - ஆம் ஆண்டு குருபூஜைக்கு வந்தவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு பிறகு 2012 ஆம் ஆண்டு கூட்டம் சற்று குறைந்தது. ஆனாலும் அடுத்தடுத்த ஆண்டு மீண்டும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இந்நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வாடகை வாகனங்களில் வருவதற்கு ஆட்சியாளர்கள் தடை விதித்தனர். இதனால் மறுபடியும் மக்கள் வெள்ளம் சற்று குறைந்தாலும் கடந்த ஆண்டு மீண்டும் கூட்டம் அதிகரித்தது. சீமான், வைகோ, திருநாவுக்கரசர், TTV.தினகரன் என இந்திய மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வருகையால் மீண்டும் தியாகி இமானுவேல் சேகரனார் குருபூஜை எழுச்சிப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு குருபூஜைக்கு வருபவர்கள் , ஏழு கிலோ மீட்டருக்கு முன்பே பிரியும் நான்கு வழிச்சாலை வழியாக சென்று பொன்னையாபுரம் அருகில் உள்ள கல்லூரி வளாகத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, ஐந்து முனைச் சாலை வழியாக அஞ்சலி செலுத்த செல்ல வேண்டும் என்று மாவட்ட காவல் நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. இந்த முடிவு மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்பத்தியது.

செய்தியறிந்து 20.08.2018 திங்கட்கிழமை அன்று மூவேந்தர் புலிப்படை, மள்ளர் நாடு, மக்கள் மறுமலர்ச்சி கழகம், தேவேந்திரர் இளைஞர் பேரவை, மருதம் மக்கள் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து கடந்த ஆண்டுகளில் வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழித்தடத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு அனுமதிக்காவிட்டால் தேவேந்திரகுல மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆண்டுதோறும் செப்-11 முன்னதாக கூட்டப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினோம். ஆனால் மாவட்ட ஆட்சியர் சட்டம் & ஒழுங்கு குறித்து நான் முடிவெடுக்க முடியாது என்று கை விரித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து கட்சி & இயக்கங்களின் கூட்டம் கூட்டுவது குறித்து யோசிக்கிறோம் என்றார். நாட்கள் கடந்து விட்டது. குறுகிய நாட்களே உள்ள நிலையில், இனியும் நாம் காலம் தாழ்த்த முடியாது என்ற காரணத்தால், மேற்படி சந்திப்புக்கு பிறகு மேற்குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனடியாக அன்று மதியமே கூடி ஆலோசனை நடத்தினோம்,

அக்கூட்டத்தில் மூவேந்தர் புலிப்படையின் சார்பில் தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் மு.கா.வையவன், மாநில அமைப்புச் செயலாளர் ஸ்டாலின், சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் நிகரன், கடலாடி ஒன்றிய செயலாளர் மாரந்தை இரா.கோபி, இராமநாதபுரம் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டோம்.

வழக்கமான வழித்தடத்தில் வீர வணக்கம் செலுத்த அனுமதிக்கக் கோரியும், சொந்த வாகனமில்லாத ஏழை, எளிய, பாமர மக்களும் வந்து வீர வணக்கம் செலுத்துவதற்கு ஏதுவாக தமிழகத்தின் அனைத்து போக்குவரத்து கழகங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க வலியுறுத்தியும் வருகின்ற 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பரமக்குடி பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி எழுத்துப் பூர்வமான மனுவை தேவேந்திரர் இயக்கங்களின் கூட்டியக்கம் என்ற பேரில் போராட்டம் நடத்துவது என முடிவெடுத்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அவர்களிடம் அனுமதி கடிதத்தை கொடுத்தோம். ஆய்வாளர் அவர்கள் அனுமதி சம்மந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசியில் பேசினார். அவரோ மேலிடத்தில் கலந்து சொல்வதாக தெரிவித்தார். 

இந்நிலையில் பரமக்குடியில் இயங்கி வரும் டாக்டர்.அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சட்ட பாதுகாப்பு மையத்தின் சார்பில் தலைவர் KVR.கந்தசாமி, செயலாளர் முத்துக்கண்ணு, பெருளாளர் பூமிநாதன், துணைத்தலைவர் பசுமலை உள்ளிட்ட வழக்கறிஞர் பெருமக்களும் 06.09.2018 வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரையும், DIGயையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து நாங்கள் ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இதனை புரிந்து கொண்ட மாவட்ட காவல் நிர்வாகம் வழக்கமான வழித்தடத்திலேயே செல்லலாம் என்றும், வாகனத்தை பொன்னையாபுரம் அருகில் உள்ள கல்லூரி வளாகத்தில் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளளர்.இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த முடிவை மூவேந்தர் புலிப்படை வரவேற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக