வியாழன், 13 செப்டம்பர், 2018

"தமிழக அரசு இமானுவேல் சேகரனாரின் திருவுருவ வெண்கல சிலையை தலைநகர் சென்னையில் அமைத்தும், நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்தும் அவரது தியாகத்தை போற்ற வேண்டும்" - மூவேந்தர் புலிப்படை வேண்டுகோள்.

"தமிழக அரசு இமானுவேல் சேகரனாரின் திருவுருவ வெண்கல சிலையை தலைநகர் சென்னையில் அமைத்தும், நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்தும் அவரது தியாகத்தை போற்ற வேண்டும்" - மூவேந்தர் புலிப்படை வேண்டுகோள்.

இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கம் செலுத்திய மூவேந்தர் புலிப்படை!

செப்டம்பர் - 11 "சமத்துவ போராளி" தலைவர் இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் என்பது நாம் மட்டுமல்ல நாடே அறிந்தது தான். அன்றைய தினத்தில் தேவேந்திரகுல மக்களும், சமத்துவத்திற்காக போராடும் இயக்கங்களும், அரசியல் கட்சியினரும் பேரணியாக சென்று மரியாதை செலுத்துவார்கள்.

அதே போல் மூவேந்தர் புலிப்படையின் சார்பில் மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள், திண்டுக்கல் மாவட்டம், சிவகங்கை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள், இராமநாதபுரம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள், விருதுநகர் மாவட்டம், திருநெல்வேலி மேற்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மகிழுந்து, சிற்றுந்து, மற்றும் பேருந்துகளில் பரமக்குடி நகருக்கு சென்று ஓட்டப்பாலத்தில் இருந்து எமது இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செ.பாஸ்கர் அவர்கள் தலைமையில் தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் மு.கா.வையவன், அமைப்புச் செயலாளர் ஸ்டாலின், சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் நிகரன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் செ.தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் இராஜாரம், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த், முகவை மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமார் உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகளும் தோழர்களும் முழக்கமிட்டு பேரணியாக சென்று தலைவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

அன்றைய சமூக மோதல்கள் பற்றி கவலையுற்ற போராளி இம்மானுவேல் சேகரனார் எமனேசுவரத்தில் நடைபெற்ற பாரதியார் விழா உரையின் போது...

"காக்கை குருவி எங்கள் சாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்"

என்ற பாடலுடன் உரையை முடித்தார்.

மனிதர்கள் மீது மட்டுமன்றி அனைத்து உயிர்களையும் நேசித்து சமூகத்தின் சம உரிமைக்காக முழு நேரப் பணியாளராய்ச் செயலாற்றி வந்தவர் அன்றிரவே சமூக விரோதிகளால் வெட்டிச் சாய்க்கப்பட்டார்.

பாரதியின் நினைவு நாளன்றே சம உரிமைப் போரில் கொல்லப்பட்ட போராளி இம்மானுவேல் சேகரனாரின் பெயரை வரலாறு பொன் எழுத்துக்களில் எழுதிச் செல்லும்.

தமிழக அரசு இமானுவேல் சேகரனாரின் திருவுருவ வெண்கல சிலையை தலைநகர் சென்னையில் அமைத்தும்...
நினைவு நாளையோ அல்லது பிறந்த நாளையோ அரசு விழாவாக அறிவித்தும் அவரது தியாகத்தை போற்ற வேண்டும் என்று நினைவிடத்தில் இருந்து மூவேந்தர் புலிப்படை தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம் .

திங்கள், 10 செப்டம்பர், 2018

இமானுவேல் சேகரனாரின் குருபூஜைக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்துள்ள பகுஜன் கிளர்ச்சியாளர்களை வரவேற்கிறோம்!

"சமத்துவ தலைவர் " இமானுவேல்சேகரனாரின் 61 ஆவது வீரவணக்க நிகழ்விற்கு பஞ்சாப், ஹரியணா, காஷ்மீர் போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்துள்ள பகுஜன் கிளர்ச்சியாளர்களை மூவேந்தர் புலிப்படை சார்பில் வரவேற்கிறோம்!.

மரபுரீதியாக கடைப்பிடித்து வரும் வழிபாட்டு முறைகளினூடே "சமத்துவ தலைவர் " இமானுவேல்சேகரனாரை நினைவு கூறும் மக்கள்!

போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளன்று பெருந்திரள் மக்கள் முளைப்பாரி, பால்குடம், காவடி, அலகு குத்துதல் போன்றவற்றுடன் வந்து நினைவிடத்தில் வணங்குவது வழக்கமான ஒன்று.

பலர் இவ்வழிபாட்டு முறைகளை இந்துத்துவச் சடங்குகள் என்றும் இவை அவருக்குச் செய்யும் மரியாதை அல்ல என்று கூறியும் எழுதியும் வருகிறார்கள். மேற்கண்ட வழிபாட்டு முறைகள் எவ்வாறு இந்துத்துவ முறைகள் என்று அவர்கள் விளக்கியதில்லை.

மக்கள் தாங்கள் மரபு ரீதியாக கடைப்பிடித்து வரும் வழிபாட்டு முறைகளினூடே தான் தங்களின் கடவுள், தலைவர்,  அன்பிற்கு உரியவர்களை நினைவு கூறுவார்கள்.

இங்கு மட்டுமல்ல ஈழத்தில் நவம்பர் 27 மாவீரர் நாளையும் இத்தகைய வழிபாட்டு முறைகள் வழியே தான் அம்மக்கள்  மாவீரர்களை நினைவு கூறுகிறார்கள்.

- காளிங்கன்.

மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய இமானுவேல் சேகரனார் குருபூஜை

"சமத்துவ தலைவர்" மாவீரர் இமானுவேல் சேகரனாரின் 61வது வீர வணக்க நாள் நிகழ்ச்சி மதுரை அரசு சட்ட கல்லூரி முன்பு மாணவர்கள் இன்று 10.09.2018 ஏற்பாடு செய்திருந்தனர். மூவேந்தர் புலிப்படையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செ.பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவீரர் இமானுவேல் சேகரனார் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை துவைக்கி வைத்தார்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

செப்டம்பர் - 11 வழக்கமான வழித்தடத்தில் செல்லலாம் என்ற மாவட்ட நிர்வாகத்தின் முடிவை மூவேந்தர் புலிப்படை வரவேற்கிறது!

செப்டம்பர் - 11
வழக்கமான வழித்தடத்தில் செல்லலாம் என்ற மாவட்ட நிர்வாகத்தின் முடிவை மூவேந்தர் புலிப்படை வரவேற்கிறது!

"சமத்துவப் போராளி" தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாளான செப்டம்பர் –11 அன்று ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு மக்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து வந்தது. இந்நிலையில் 2011 - ஆம் ஆண்டு குருபூஜைக்கு வந்தவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு பிறகு 2012 ஆம் ஆண்டு கூட்டம் சற்று குறைந்தது. ஆனாலும் அடுத்தடுத்த ஆண்டு மீண்டும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இந்நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வாடகை வாகனங்களில் வருவதற்கு ஆட்சியாளர்கள் தடை விதித்தனர். இதனால் மறுபடியும் மக்கள் வெள்ளம் சற்று குறைந்தாலும் கடந்த ஆண்டு மீண்டும் கூட்டம் அதிகரித்தது. சீமான், வைகோ, திருநாவுக்கரசர், TTV.தினகரன் என இந்திய மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வருகையால் மீண்டும் தியாகி இமானுவேல் சேகரனார் குருபூஜை எழுச்சிப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு குருபூஜைக்கு வருபவர்கள் , ஏழு கிலோ மீட்டருக்கு முன்பே பிரியும் நான்கு வழிச்சாலை வழியாக சென்று பொன்னையாபுரம் அருகில் உள்ள கல்லூரி வளாகத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, ஐந்து முனைச் சாலை வழியாக அஞ்சலி செலுத்த செல்ல வேண்டும் என்று மாவட்ட காவல் நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. இந்த முடிவு மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்பத்தியது.

செய்தியறிந்து 20.08.2018 திங்கட்கிழமை அன்று மூவேந்தர் புலிப்படை, மள்ளர் நாடு, மக்கள் மறுமலர்ச்சி கழகம், தேவேந்திரர் இளைஞர் பேரவை, மருதம் மக்கள் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து கடந்த ஆண்டுகளில் வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழித்தடத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு அனுமதிக்காவிட்டால் தேவேந்திரகுல மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆண்டுதோறும் செப்-11 முன்னதாக கூட்டப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினோம். ஆனால் மாவட்ட ஆட்சியர் சட்டம் & ஒழுங்கு குறித்து நான் முடிவெடுக்க முடியாது என்று கை விரித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து கட்சி & இயக்கங்களின் கூட்டம் கூட்டுவது குறித்து யோசிக்கிறோம் என்றார். நாட்கள் கடந்து விட்டது. குறுகிய நாட்களே உள்ள நிலையில், இனியும் நாம் காலம் தாழ்த்த முடியாது என்ற காரணத்தால், மேற்படி சந்திப்புக்கு பிறகு மேற்குறிப்பிட்ட இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனடியாக அன்று மதியமே கூடி ஆலோசனை நடத்தினோம்,

அக்கூட்டத்தில் மூவேந்தர் புலிப்படையின் சார்பில் தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் மு.கா.வையவன், மாநில அமைப்புச் செயலாளர் ஸ்டாலின், சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் நிகரன், கடலாடி ஒன்றிய செயலாளர் மாரந்தை இரா.கோபி, இராமநாதபுரம் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டோம்.

வழக்கமான வழித்தடத்தில் வீர வணக்கம் செலுத்த அனுமதிக்கக் கோரியும், சொந்த வாகனமில்லாத ஏழை, எளிய, பாமர மக்களும் வந்து வீர வணக்கம் செலுத்துவதற்கு ஏதுவாக தமிழகத்தின் அனைத்து போக்குவரத்து கழகங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க வலியுறுத்தியும் வருகின்ற 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பரமக்குடி பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி எழுத்துப் பூர்வமான மனுவை தேவேந்திரர் இயக்கங்களின் கூட்டியக்கம் என்ற பேரில் போராட்டம் நடத்துவது என முடிவெடுத்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அவர்களிடம் அனுமதி கடிதத்தை கொடுத்தோம். ஆய்வாளர் அவர்கள் அனுமதி சம்மந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசியில் பேசினார். அவரோ மேலிடத்தில் கலந்து சொல்வதாக தெரிவித்தார். 

இந்நிலையில் பரமக்குடியில் இயங்கி வரும் டாக்டர்.அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சட்ட பாதுகாப்பு மையத்தின் சார்பில் தலைவர் KVR.கந்தசாமி, செயலாளர் முத்துக்கண்ணு, பெருளாளர் பூமிநாதன், துணைத்தலைவர் பசுமலை உள்ளிட்ட வழக்கறிஞர் பெருமக்களும் 06.09.2018 வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரையும், DIGயையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து நாங்கள் ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இதனை புரிந்து கொண்ட மாவட்ட காவல் நிர்வாகம் வழக்கமான வழித்தடத்திலேயே செல்லலாம் என்றும், வாகனத்தை பொன்னையாபுரம் அருகில் உள்ள கல்லூரி வளாகத்தில் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளளர்.இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த முடிவை மூவேந்தர் புலிப்படை வரவேற்கிறது.

புதன், 5 செப்டம்பர், 2018

ஆண்டிப்பட்டி பங்களாவில் மூவேந்தர் புலிப்படையின் கொடியேற்று விழா!

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், ஆண்டிப்பட்டி பங்களாவில் 01.09.2018 சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை மதுரை புறநகர் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மாரிக்கண்ணன், வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் வசந்த் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தலைமை ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் செ.பாஸ்கர் கொடியை ஏற்றினார். இளைஞர்கள், பெண்கள், முதியவர், குழந்தைகள் என அனைவரும் ஒன்று கூடி விழாவை சிறப்பித்தனர்.

"பாசிசம் பாசிசம்தான் " மதுரை புத்தக திருவிழாவில் நடைபெற்ற நூல் அறிமுக விழா!

ஜிக்னேஷ் மேவானி அவர்களின் நேர்கானலை கலைவேலு என்பவர் தமிழில் மொழி பெயர்த்து, செஞ்சோலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "பாசிசம் பாசிசம்தான் " எனும் நூல் மதுரை புத்தகத் திருவிழாவில் இன்று 05.09.2018 மாலை சுமார் 6 மணியளவில் கடை எண்: தமிழ்த்தேசம் அங்காடி முன்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்.குமரன் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் மூவேந்தர் புலிப்படையின் சார்பில் நானும் (மு.கா.வையவன், தலைமை இணை ஒருங்கிணைப்பாளர்), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் மீ.தா.பாண்டியன்,  மதுரா கல்லூரியின் முன்னால் முதல்வரும், PUCL-ன் மாநில செயலாளருமான பேராசிரியர் முரளி, "உயர்நீதிமன்றத்தில் தமிழ்" போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பகத்சிங், தமிழ்ப் புலிகளின் பொதுச் செயலாளர் பேரறிவாளன், மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் புரட்சி வேங்கை மு.பா., தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, புரட்சிப் புலிகள் இயகத்தின் தலைவர் திலீபன், தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சியின் தலைவர் ணிபாபா, அம்பேத்கர் தேசிய இயக்கத்தின் தலைவர் அம்பேத்பாபு,  ஆகியோர் கூட்டாக சேர்ந்து அறிமுகம் செய்தனர். முதல் பிரதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன் வழங்க ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி பெற்றுக் கொண்டார்.

"கப்பலோட்டிய தமி்ழர்" வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் இன்று! மூவேந்தர் புலிப்படை தோழமை இயக்கங்களுடன் வீரவணக்கம் செலுத்தியது!!

=============================================

மூவேந்தர் புலிப்படையின் சார்பில் நானும் (மு.கா. வையவன், தலைமை இணை ஒருங்கிணைப்பாளர்), மாநில அமைப்புச் செயலாளர் ஸ்டாலின், மருது மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர், தோழர்.புரட்சி வேங்கை மு.பா., மாணவரணி செயலாளர் தோழர்.மலேசியாமுத்து, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் தோழர்.சாகுல் அமீது, பழனிபாபா பேரவையின் மாவட்ட செயலாளர் தோழர்.முஜீபுர் ரகுமான் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்தினோம்.

=============================================

ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல்  ஓட்டிய தமிழர்...
தொழிலாளர்களுக்காகப் போராடிய தொழிற்சங்கத் தலைவர்...
சுதந்திரத்துக்காகத்  திலகரைத் தலைவராகக்கொண்டு கர்ஜித்த  சிங்கம்...
நீதி மன்றத்தில் சுதேசிகளுக்காக வாதாடிய வழக்குரைஞர்...

கடைசியில் சிறைப்பட்டு, செக்கிழுத்து வறுமையில் வாடினார் என்பதை எண்ணும்போது கல்லும் கரையும்.